×

விவசாய நிலங்களில் மருந்துகள் தெளிக்க டிரோன் பயன்படுத்த அனுமதி வேண்டும்

 

ஊட்டி, செப்.13: நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் மருந்துகள் தெளிக்க டிரோன் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர். நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கம் கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்தில், கிருஷ்ணன் வரவேற்றார். துணை தலைவர் சுரேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் பாபு ஆண்டறிக்கையை வாசித்தார். வரவு-செலவு கணக்குகளை பொருாளர் ரவி சமர்பித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒக்கிலிகர் சங்க தலைவர் சதீஷ்குமார், முன்னாள் செயலாளர் சென்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய நிலத்தை பதப்படுத்தும் இயந்திரம் பயன்படுத்த தோட்டக்கலைத்துறையின் அனுமதி கேட்டால், கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலை மாறி விவசாயிகள் விண்ணப்பித்தால், உடனடியாக அனுமதி வழங்க தோட்டக்கலைத்துறையினர் முன்வர வேண்டும். விவசாயிகளுக்கு விதைகள் உரிய சமயத்தில் கிடைப்பதில்லை. விற்பனையாளர்களே தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். விலையையும் உயர்த்தி விடுகின்றனர்.

விவசாயிகளுக்கு தேவையான விதைகள் உரிய சமயத்திலும், குறைந்த விலையிலும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு மருந்து தெளிக்கு டிரோன் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மருந்து தெளிக்க டிரோன் அனுமதி வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகள் பாதிக்க்கப்பட்டுள்ளனர். எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு கிடைக்கும் விதைகள், இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள் தரமானதாக இல்லை. தரமான பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post விவசாய நிலங்களில் மருந்துகள் தெளிக்க டிரோன் பயன்படுத்த அனுமதி வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க...